Description
சினிமாவுக்கு கதைகள் எழுதுவதில் நான் தேர்ந்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். அதனாலேயே சில நண்பர்கள் என்னை “கதைத்தாத்தா’, “பீஷ்மர்’, “கதைஞானம்’ என்றெல்லாம் பாராட்டு கிறார்கள்.
ஆனால் வரலாறு எழுதுவது… அதிலும் எழுதி புத்தகமாக வெளியிடுவதில் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கிறது. காரணம்… முறையாகக் கற்ற எழுத்தாளர்கள் என்னைக் கறையாக எண்ணி எடுத்தெறிந்து விடுவார்களோ என்ற பயம்தான். இருந்தாலும் கோதைநாயகியம்மாள், கி.ராஜநாராயணன் போன்றோர் ஆரம்பத்தில் படிக்காதவர்கள்தான். பின்னாளில் மிகச்சிறந்த எழுத்தாளர்களானார்களே. அவர்களை வழிகாட்டியாக எண்ணி எழுதத் துணிந்துவிட்டேன். கொள்ளுவதும், தள்ளுவதும் அன்பு வாசகர்களின் உள்ளங்களே.
பார்த்ததை, கேட்டதை, சொன்னதை அனுபவமாக எடுத்துக்கொண்டேதான் இதுவரை சினிமாவுக்கு 30 கதைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். இதில் மிகப்பெரிய இயக்குநர்களுடன் திரைக்கதை ஒத்துழைப்பு சுமார் நூறைத் தாண்டும். தயாரிப்பு 16 படங்கள். பாடல்கள் எட்டு. இயக்கம் 2. மெயின் காமெடியனாக “இது நம்ம ஆளு’ ஒன்றுதான். சின்னச் சின்ன வேஷங்கள் சில… இதற்குமேல் என் தகுதிக்கு என்ன வேண்டும்? நான் எடுத்துக்கொண்ட இந்த புது முயற்சிக்கு உங்கள் ஆதரவுதான் வேண்டும்.
முக்கியமாக இங்கே சொல்லவேண்டியது ஒன்று உண்டு. என்னவென்றால் 1974-ல் ஒரே மாதத்தில் என்னிடம் ஆறு கதைகளை சினிமா தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். எல்லாரும் “உடனே ஷூட்டிங் போக வேண்டும்; எழுதிக் கொடுங்கள்’ என்று அவசரப்படுத்தினார்கள். அப்போது நான் ஒரு யுக்தியைக் கையாண்டேன். தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரையும் டேப்ரிக்கார்டர் வாங்கி வரச் சொல்- அதிலே கதையைச் சொல்-விட்டேன். உதவியாளர்களை வைத்து அதில் உள்ளதை எழுதிக் கொடுக்கச் சொல்-விட்டேன். அவர்கள்… பனசை மணியன், ஜெயபாலு சீனிவாசன், தஞ்சை கே.சுரேஷ் குமார், வி.எம்.ஏ. ஷாலப்பா… தினகரன் அப்பப்ப சிலரும் இப்படிப் பழக்கப்பட்டதால் இதுவரை அதையே கையாண்டு வருகிறேன்.
“சினிமா சீக்ரெட்’ தொடரையும் ரெக்கார்டு பண்ணித்தர்றேன் என்றேன், நக்கீரன் துணையாசிரியர் இரா.த.சக்திவே-டம். அப்போது அவர் சொன்னார்… “ஐயா, நீங்கள் சொல்-க்கொண்டே வாருங்கள், நான் எழுதுகிறேன். அது சரியில்லையென்றால் ரெக்கார்டு பண்ணலாம்” என்றார். அதையும்தான் பார்ப்போமே என்று உளுந்தமூட்டையை கொத்திவிட்டது போல் பொலபொலவென்று கொட்டிக்கொண்டேயிருந்தேன். மூன்று வாரங்களுக்குச் சேர்ந்தார்போல்… என்ன ஆச்சரியம் ஒருவரிகூட தவறாமலும் கூடாமலும் எழுதியதோடு, அதனை அழகுபடுத்தியும் காட்டி என்னை அசத்திவருகிறார். அவருக்கு என் முதல் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். “சினிமா சீக்ரெட்’ தொடர் எழுத எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நக்கீரன் ஆசிரியர் உயர்திரு நக்கீரன்கோபால் அவர்களுக்கும், நக்கீரன் காமராஜ், மற்றும் அவருடன் தொழில் செய்யும் அத்தனைபேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை நக்கீரன் பத்திரிகையில் தொடராக வந்த “சினிமா சீக்ரெட்’டை பொறுமையாக படித்தும் பாராட்டியும், அன்பு காட்டியும் வரும் அனைத்து வாசகர்களுக்கும் தலைவணங்குகிறேன்… நன்றி!
Reviews
There are no reviews yet.